வீரர்கள் காயத்துக்கு ஐபிஎல் காரணமா? ஆஸி கோச் சூசகம்!

0
4

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. நான்காவது போட்டி வருகிற 15ஆம் தேதி பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது. இத்தொடரில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள் பலர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் எனக் காயத்தால் நீக்கப்பட்டவர்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

குறிப்பாக மூன்றாவது டெஸ்டில் பங்கேற்ற ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்களும் காயம் காரணமாக நான்காவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளனர். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்தனை முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதற்கு காரணம் என்ன எனப் பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ஐபிஎல் தொடரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார். “இந்தத் தொடரில் பங்கேற்ற பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஐபிஎல் நடத்திய நேரம் யாருக்கும் ஏற்றது அல்ல. குறிப்பாக இதுபோன்ற (ஆஸி சுற்றுப் பயணம்) பெரிய தொடருக்கு முன்னர் ஐபிஎல் நடந்தது ஏதுவாக இல்லை” எனக் கூறினார்.

மேலும் பேசிய லேங்கர், “ஐபிஎல் எனக்குப் பிடித்த விளையாட்டு. கவுண்டி கிரிக்கெட்டைப் போலத்தான் ஐபிஎல் தொடரையும் பார்க்கிறேன். கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதால் வீரர்களின் தரம் மேம்படும். ஐபிஎல் தொடரிலும் அப்படித்தான். ஆனால் ஐபிஎல், கொரோனா காரணமாகத் தள்ளிப் போனது. இரு அணி வீரர்களும் காயத்தால் அவதிப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை அவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் 13ஆவது சீசன் செப்டம்பர் – நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நடத்தப்பட்டது. வழக்கமாக ஏப்ரல் – மே மாதங்களில்தான் இது நடைபெறும். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக் கேப்டன் டேவிட் வார்னரும் காயத்தால் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here