இது வழக்கமான லாக்கப் டெத் இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை

0
4
c v shanmugam
நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சாத்தான்குளம் சம்பவம். ஆனால், இருவரும் உடல்நலக் கோளாறால் இறந்தனர் என்று முதலமைச்சர் சொன்னதும், இது அல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சொன்னதும் இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது அரசு என்றும் கேள்விகள் எழுந்தன. அதப்பிறகும் கூட கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது மேலும் மேலும் அரசுக்கு எதிரான அலையை அதிகரித்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தலைவர் ஸ்டாலினை நோக்கி ஏராளமான கேள்விகளை முன்வைக்கும் அவர், இது லாக்கப் டெத் அல்ல என்ற கடம்பூர் ராஜுவின் கருத்தை ஒட்டியே தனது அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

samayam tamil

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இது வழக்கமான ‘Lock up’ மரணங்கள் போல் இல்லாமல், காவலர்கள், அரசு மருத்துவர், நீதிபதி, சிறை அதிகாரிகள் என பலர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளும், கவனக்குறைவு புகார்களும், காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், முன்வைக்கப்படும் பலதரப்பட்ட ஐயங்களுக்கு விடை கண்டு, அவர்களில் தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டிய தலையாயபொறுப்பு தமிழ்நாடு அரசின் முன் நிற்கிறது.

மேலும் இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேரடியாக கண்காணித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதற்கிடையில் நடைபெற்று இருக்கும் சம்பவத்தின் கடுமை கருதி, எவ்வித ஐயங்களுக்கும் இடம் தந்துவிடக் கூடாது என்னும் நோக்கத்தோடு, இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான CBI வசம் ஒப்படைக்க அதிமுக அரசு முடிவெடுத்திருக்கிறது.

உடல்கூராய்வு முடிவுகள் மற்றும் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கும் நீதிபதி பாரதிதாசனின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றத்திற்கு உரியவர்களை இனம் கண்டு, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடரவிருக்கிறது.

அதே வேளையில், இவ்வழக்கு விசாரணைக்கு, குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடும், அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள்செய்வதாக தோன்றுகிறது. இதற்காக அவரது குடும்ப தொலைகாட்சிகளும், அவர்களின் கூட்டணி கட்சி ஊடகங்களும், அரசின் மீது பழிபோடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.“Justice for Jayaraj and Benicks” என்னும் பதாகைகளை தூக்கி பிடிப்பதும், விசாரணையை நடத்த சென்ற நீதிபதியை, காவலர்கள் மிரட்டியதாக சொல்லப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு உட்பட இவ்விவகாரங்களில், நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றுக்கு போட்டியாக, அதற்கும் மேலானவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் தி.மு.க, தாங்களே ஒரு விசாரணை அமைப்பை நடத்துவதுபோல நாடகம் ஆடி, வழக்கின் போக்கை குலைப்பதற்கும், அரசியலாக்குவதற்கும், குடும்ப ஊடகங்களை வைத்து தி.மு.க சதி செய்து வருகிறது. இதிலும் அரசியல் ஆதாயம் தேடும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிமுக அரசு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொண்டுள்ளது. தந்தை மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு, உரிய தண்டனையை, உட்சபட்ச தண்டனையாக பெற்று தரும் என்பது நிச்சயம். எல்லோரது ஆசாபாசங்களையும், கனிவுகொண்ட அதிமுக அரசு அறிந்திருக்கிறது.

ஒரு தந்தையை, ஒரு சகோதரனை, ஒரு கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் ஒரு குடும்பத்தின் வலி எத்தகையது என்பதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். உயிர்களையும், உறவுகளையும் இழந்து வாடுபவர்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை, இந்த அரசு அவர்களுக்கு நிச்சயம் உரித்தாக்கும்.ஆனால் எதிர்கட்சி தலைவர் இச்சம்பவத்தை அரசியலாக்கி, வழக்கம் போலவே “முதல்வர் பதவி விலக வேண்டும்”- அந்த பதவியில் தான் அமர வேண்டும் என்னும் அதிகார பித்து பிடித்தவராக, பின்னால் இருந்து எழுதி தரப்படும் அவதூறுகளை அறிக்கைகளாக அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

அன்று கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை அடித்து கொலை செய்துவிட்டு, பெற்றவர்களை பிடித்து வந்து, தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த இவர்களை விட, பெற்றோரது உன்னதத்தை உணர்ந்தவர்கள் நாங்கள்.

பட்டபகலில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில், பத்திரிகை ஊழியர்கள் மூவரை எரித்து படுகொலை செய்துவிட்டு, இன்று இவர்கள் ஜீவகாருண்யம் பேசுவது, இரத்த காட்டேரி, தான் சுத்த சைவம் என்று சொல்வதற்கு சமம். தி.மு.க. வை வளர்ப்பதற்கு தன் உயரம் தேயத் தேய உழைத்த தா.கிருட்டிணனை, தார் சாலையில் வெட்டி போட்டு நடைபயிற்சியை கொலை பயிற்சியாக்கிய, கொடியவர்களின் கூடாரம், குற்றவாளிகளின் நாற்றங்கால் தான் தி.மு.க என்பதை இந்த நாடறியும்.

இவ்வளவு ஏன்….? ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய, உஸ்மான் சாகித் பல்வாவை, மு.க. ஸ்டாலின் இரண்டுமுறை சந்தித்து பேசினார் என்றும், அதுசமயம் கருணாநிதி பெயரிலான தொலைகாட்சியினைத் தொடங்க தேவையான பெருந்தொகை தி.மு.க-விற்கு தரப்பட்டது என்பதையும், சி.பி.ஐ-யிடம் வாக்குமூலமாக கொடுத்த பெரம்பலூர் சாதிக்பாட்ஷா, அடுத்த இரண்டு நாளிலேயே மர்மமாக இறந்தார் என்றும், “இதற்கு ஸ்டாலின்தான் காரணம். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக” கொலைப்பழி சுமத்திய வைகோவை மறுமாதமே மு.க. ஸ்டாலின் தன்னோடு கூட்டணியில் சேர்த்துக்கொண்டது ஏன்..? எதனை மூடி மறைக்க….?அதுபோலவே, ஸ்டாலினின் அனைத்து உள் விவகாரங்களையும் அறிந்தவராக, அவரது பதினைந்து வருட நிழல் நண்பராக இருந்த, அண்ணாநகர் ரமேஷ், அவரது மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டபோது, அருகில் இருந்த அண்ணா நகருக்கு செல்லாதவர்கள், இப்போது மட்டும் தன் மகனை E-Pass வாங்காமல், தொற்றுநோய் காலத்தில் தூத்துக்குடி வரை அனுப்பிவைத்தது எதற்காக என்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே, அவதூறுகளால் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று கனா காண்பதையும், கணக்கு போடுவதையும், விட்டுவிட்டு, நெறி சார்ந்த அரசியலை மு.க. ஸ்டாலின் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, தர்மத்திற்கு மாறான, தரம்கெட்ட போக்கை இனியும் அவர் தொடருவாரானால், தி.மு.க முகமற்று அழியும் என்பது நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here