பணமில்லாத ஏடிஎம்மிற்கு, இறுதி சடங்கு நடத்தி அஞ்சலி!

0
5
கன்னியாகுமரியில் செயல்படாதிருந்த ஐஓபி வங்கி ஏடிஎம்மிற்க்கு மர்ம நபர்கள் இறுதிச் சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மர்ம நபர்கள் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம் பகுதியில் ஐஓபி ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மூலம் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள மேக்கா மண்டபம், வேர் கிளம்பி, மணலிக்கரை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிருந்து இந்த ஏடிஎம்மில் பணம் இருப்பதே இல்லை. அதிகாரிகள் ஊரடங்கு ஆரம்பித்த சில நாட்களில் பூட்டுப் போட்டுச் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பணம் எடுக்கச் சிரமப்பட்டனர்.

இதனால் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் பணம் எடுக்கக் குறித்த ஏடிஎம் மையத்திற்கு வந்து, பூட்டி இருப்பதைப் பார்த்து ஏமார்ந்து போவது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலானோர் பணம் எடுக்கத் தக்கலை, அழகிய மண்டபம் போன்ற பகுதிகளுக்குப் பல கிலோ மீட்டர் பயணித்து பணம் எடுக்க வேண்டிய சூழல் உருவானது.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஐஓபி வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் வங்கி மேலாளருக்கும் பல முறை புகாரும் அளித்துள்ளனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் வெறுப்பான அப்பகுதியிலிருக்கும் சிலர், நேற்று நள்ளிரவு அந்த ஏடிஎம்மிற்கு வந்துள்ளனர். அங்கு பூட்டிகிடந்த ஏடிஎம் மையத்திற்கு மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, மெழுகுவர்த்தி ஏற்றி இறுதி சடங்கு செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இதைச் செய்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், “ஒரு ஏடிஎம்தான் இங்க இருக்கு, அதையும் மூடி வச்சா, நாங்க பணத்துக்கு எங்க போறது. அதான் யாரோ, இப்படி பண்ணிட்டாங்க. இதுல தப்பா எதுவும் தெரியலை” என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here