வலுவிழக்கும் ஸ்பெயின் அணிகளின் ஆதிக்கம்: காலிறுதி போட்டியில் ஒரே ஒரு ஸ்பெயின் அணி!

0
7

ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள முன்னணி அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகளான ரியல்மாட்ரிட், பார்சிலோனா, அட்லடிகோ போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் ஏழு முறை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகள் வென்றுள்ளனர். மட்டுமில்லாமல் 2014 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் இரண்டு ஸ்பெயின் அணிகள் எதிரெதிரே மோதினர். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகளுக்கு எதிராக பிற அணிகள் மோதுவதற்கு அஞ்சினர்.

பார்சிலோனா அணியின் டிக்கி டாக்கா முறை, அணியின் தாக்குதல் அணுகுமுறை, அட்லடிகோ அணியின் கவுண்டர் அட்டாக் என அனைத்தும் பிற அணிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து ஒரே ஒரு முறைதான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதைவிட மோசமாக இந்த ஆண்டு ஒரே ஒரு அணி மட்டுமே காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகளின் ஆதிக்கம் சடாரென சுக்குநூறாக்க பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடைசியாக 2015ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பார்சிலோனா அணி, கடந்த சில ஆண்டுகளாக அச்சத்தைக் கொடுக்கும் ஒரு அணியாக இல்லை, அதன் வீழ்ச்சி வெளிப்படையாக தெரிந்தது. 2016 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் மற்றொரு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணியான அட்லடிகோ அணிக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறினார்கள்.

அந்த சமயமே பார்சிலோனா அணியில் அணுகுமுறையை பலர் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த யுவன்டஸ் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் படு தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் அணியின் அப்போதைய மேலாளரான லூயிஸ் என்றிகே பணி நீக்கப்பட்டார், மட்டுமல்லாமல் அணியில் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான நெய்மார் இந்த ஆட்டத்திற்கு பின்னால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிஎஸ்ஜி அணியில் இணைந்தார்.

இது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 2018 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோமா அணிக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது. 2019ஆம் ஆண்டு அரையிறுதி வரை சென்ற பார்சிலோனா அணி லிவர்பூல் அணிக்கு எதிராக 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.

2020 ஆம் ஆண்டு பார்சிலோனா அனி 8-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேயர்ன் அணிக்கு எதிராக வெளியேறியது, இன்று தோல்வி அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. தற்பொழுது 2021 ஆம் ஆண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிஎஸ்ஜி அணிக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. பார்சிலோனா அணிக்கு எதிராக ஆடுவதற்கு அஞ்சிய காலம் போய் தற்போது, பார்சிலோனா அணிக்கு எதிராக ஆடினால் வெற்றி நிச்சயம் என்ற காலம் வந்துவிட்டது.

2016, 2017, 2018 என ஹாட்ரிக் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து 2018ஆம் ஆண்டு நட்சத்திர வீரரான ரொனால்டோ வெளியேறினார். அதனால் அணியின் அப்போதைய மேலாளராக இருந்த சிடான் மேலாளர் பதவியில் இருந்து விலகினார், அதிலிருந்து ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக மீண்டும் அவர் மேலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவரால் ரியல் மாட்ரிட் அணியை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றி செல்ல இயலவில்லை, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரியல்மாட்ரிட் அணி வெளியேறியது. 2019ஆம் ஆண்டு அயாக்ஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த ரியல் மாட்ரிட் 2020ஆம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக தோல்வியடைந்தது.

இந்த ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அடலன்டா அணிக்கு எதிராக 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது, ஆனால் காலிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணிக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. நடப்பு சீசனில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகளில் ரியல்மாட்ரிட் அணி மட்டுமே காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகளை போன்று கோப்பைகளை பிடிக்காவிட்டாலும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அஞ்சக் கூடிய அணியில் ஒன்றாக இருந்த அட்லடிகோ அணியும் 2017 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி வந்த பின்னர் நடைபெற்ற 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வில்லை, மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை மட்டுமே காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர், மேலும் ஒருமுறை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறினர்.

இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செல்சீ அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் இப்படி தோல்வியடைந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. ஸ்பெயின் நாட்டின் லா லிகா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அட்லடிகோ அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கால் இறுதிச்சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது ஸ்பெயின் நாட்டு அணிகளை பல்வேறு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
தொடர்ச்சியாக பல சாம்பியன்ஸ் லீக் கோப்பையை குவித்த ஸ்பெயின் நாட்டு அணிகள் தற்பொழுது கால் இறுதிச்சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறுகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here