சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் அதிமுக; வெளியான முக்கிய அறிவிப்பு!

0
6
ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தொடங்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றி பெற நிகழ்த்தப் போகும் போர் முழக்கம் தான் இந்தக் கூட்டம்.

இதில் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுகவின் பிரச்சார வியூகம் குறித்து கட்சியினருக்கு எடுத்துரைக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 19ஆம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பொதுமக்கள் முன்பு பேசிய தமிழக முதல்வர், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பொங்கல் பரிசு குறித்து அறிவித்தார். அதுவும் வழக்கத்தை விட இரண்டரை மடங்கு உயர்த்தி 2,500 ரூபாயாக அறிவித்தது தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்பது கூட நினைவில்லாமல் அரசின் அறிவிப்பை தனது சுய லாபத்திற்காக எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.

எப்படியோ பொங்கல் பரிசு அறிவிப்பின் மூலம் தமிழக வாக்காளர்களை கவர அதிமுக ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை இனிப்பான திட்டங்கள் தமிழக மக்களுக்கு கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here