எஸ்.ஜானகி இறந்துவிட்டார் என பரவிய வதந்தி! குடும்பத்தினர் விளக்கம்

1
5
S.Janaki
தென்னிந்திய சினிமாவின் நைட்டன்கேள் என வர்ணிக்கப்படுபவர் எஸ்.ஜானகி. கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக சினிமா துறையில் முன்னணி பாடகியாக வலம் வந்த அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் தான் இனி பாடப் போவதில்லை என ஓய்வை அறிவித்தார். நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள், கலைமாமணி பட்டம் உட்பட பல விருதுகளை அவர் வாங்கியுள்ளார்.

நேற்று எஸ் ஜானகி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என ஒரு செய்தி மிக வேகமாக சமூக வலைதளத்தில் பரவியது. ஆனால் அது முற்றிலும் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இது முற்றிலும் வதந்தி என விளக்கமும் கொடுத்திருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் கூறியிருந்தனர். 82 வயதாகும் ஜானகி இறந்துவிட்டதாக வதந்தி பரவி இது முதல்முறை அல்ல இதற்கு முன்பு ஐந்தாறு முறை இப்படி நடந்துள்ளது. இறந்துவிட்டார் என வதந்தி பரவுவதும், அவரது குடும்பத்தினர் விளக்கம் அளிப்பதும் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கு முன்பு எஸ் ஜானகி மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த போது அவர் கால் தவறி கீழே விழுந்ததில் இடுப்பில் முறிவு ஏற்பட்டது. அதற்காகத் சென்ற மாதம் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அவர் உடல்நலக் குறைவால் காலமானார் என வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்.

பிரபல நடிகர் மனோபாலா எஸ் ஜானகி நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எஸ் ஜானகி பற்றிய வதந்தி பரவிய நிலையில், இது தொடர்பாக பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

“காலையிலிருந்து எனக்கு கிட்டத்தட்ட இருபது போன் கால்கள் வந்துவிட்டது. எஸ் ஜானகி உடல்நிலை பற்றி கேட்கின்றனர். சமூக வலைத்தளத்தில் யாரோ அவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு உள்ளனர். என்ன முட்டாள்தனம் இது? நான் அவரிடம் பேசினேன். அவர் நலமாக தான் இருக்கிறார். சில மக்கள் சில கலைஞர்களை அதிக அளவு விரும்புவார்கள், இப்படி செய்தி வந்தால் சிலருக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு உண்டு. சமூக வலைதளத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். இது போல வேடிக்கைக்காக எதையும் செய்யாதீர்கள். ஜானகி அம்மா இன்னும் நீண்டநாள் வாழ்வார். அவர் பாதுகாப்பாகவும் அதிக ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்” என எஸ் பி பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

1957இல் பாடகியாக அறிமுகமானார் எஸ் ஜானகி இதுவரை கிட்டத்தட்ட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ல் அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கியது, ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். “55 வருடமாக பாடிக்கொண்டிருக்கிறேன். என் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை தான் சிறந்த விருதாக கருதுகிறேன். நான் அரசை குறை கூறவில்லை. ஆனால் மிக தாமதமாக வழங்கப்பட்டுள்ள இந்த பத்ம பூஷன் விருதை ஏற்க மாட்டேன்” என கூறியிருந்தார் ஜானகி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here