ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத விரக்தி… மும்பையின் ‘ஜூனியர் ஸ்டெயின்’ தற்கொலை

0
7

மும்பையைச் சார்ந்த பிரபல உள்ளூர் வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர், தென்னாப்பிரிக்கா வீரர் டெல் ஸ்டெயின் போன்று அச்சு அசலாகப் பந்து வீசி வந்ததால், ’ஜூனியர் ஸ்டெயின்’ என்று பெயர்பெற்றவர். இந்த ஆண்டிற்கான ஏலத்தில் பங்கேற்றார்.

இருப்பினும் எந்த அணியும் இவரைக் கண்டுகொள்ளாததால் நீண்ட நாட்களாக மனஉளைச்சலில் இருந்தார் என்று அவரின் நண்பர் கூறியுள்ளார்.

மும்பையில் கோகுல்தம் என்னும் பகுதியில் கரன் திவாரி வசித்து வந்தார். அறைக்குள் சென்ற இவர் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவைத் தட்டினர். எவ்வித பதிலும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு அறைக்குள் சென்று பார்த்தபோது கரன் திவாரி தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை கேட்டு திவாரியின் பெற்றோர் நிலைகுலைந்து போயினர்.

சம்ப இடத்திற்கு விரைந்த காவல் துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளரை சந்தித்த அப்பகுதியின் காவல் ஆய்வாளர், “தற்கொலை என வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத விரக்தியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரன் திவாரியின் நண்பரிடம் நடத்திய விசாரணை பற்றியும் காவல் துறையினர் விவரித்தனர். “உதய்பூரில் உள்ள தனது நண்பரை அலைப்பேசியில் தொடர்புகொண்டு, தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கரன் திவாரி கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத காரணத்தால்தான் இம்முடிவை எடுத்துள்ளேன் என்றும் அப்போது அவர் தெரிவித்திருக்கிறார். உடனே, அவரின் நண்பர் கரன் திவாரியின் குடும்பத்தினருக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், அதற்குள் திவாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐயின் விதிமுறைப்படி, உள்ளூர் வீரர் மாநில அணியின் இடம்பெற்றிருந்தால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். கரன் திவாரி மும்பை கிளப் கிரிக்கெட் போட்டிகளில் நல்ல முறையில் விளையாடியதால் அவரின் பெயரும் ஏலத்தில் இருந்தது. இருப்பினும், எந்த அணியும் அவரை தேர்வுசெய்யவில்லை.

கரன் திவாரியின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றிப் பேசிய அவரது நண்பர், “இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்துவிட முடியும் என்று கரன் உறுதியாக இருந்தான்.

இறப்பதற்கு முன்பு, வாட்ஸ்அப் ஸ்டேடஸில் அவன் பந்துவீசிய, பேட்டிங் செய்த வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தான். ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத விரக்தியில் அவன் தற்கொலை முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here