நம்ம ஊரு பொங்கலுக்கு ஏன் வருகிறார் ஜே.பி.நட்டா?

0
5
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் இல்லாத நிலையில், அதனை ஏற்படுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை அக்கட்சி தொடர்ந்து எடுத்து வருகிறது. , காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தேசியக் கட்சிகளாக தேசத்தை ஆட்டிப் படைத்தாலும், தமிழர்களுக்கு அவர்கள் அந்நியர்களாகவே இருக்கின்றனர். எனவே, தமிழர்களுக்கு நாங்களும் நெருக்கமானவர்கள் என்பதை காட்டிக் கொள்ள அடிக்கடி புதிய யுக்திகளை அக்கட்சியினர் கையாண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அவ்வப்போது தமிழர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தாலும் பின்னர் அதிலிருந்து விலகிப் போய்விடும். திமுகவுடன் நெருங்கிய கூட்டணி இருந்தால் மட்டும் போதுமானது என்ற நிலையிலே அக்கட்சி இருக்கிறது. ஆனால், பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் வலுவாக காலூன்றவே அக்கட்சி முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், தமிழர்களின் சித்தாந்தங்களுடன் பாஜகவால் இதுவரை இணைந்து பயணிக்க முடியவில்லை. பாஜகவுடன் தமிழர்கள் முரண்பட்டே நிற்கின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலே அதற்கு மிகபெரிய சாட்சி.

ஒன்று எதிர் அரசியல் செய்வது அல்லது உறவாடி கெடுப்பது என்பது பாஜக மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். இதில், இரண்டாவதில் பாஜகவுக்கு பெரும்பாலும் வெற்றியே கிட்டியுள்ளது. எனவே, தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த அக்கட்சி தற்போது தமிழர்களின் தோழ்களில் கைபோட ஆரம்பித்துள்ளது. ராமர், விநாயகரை வைத்து பேசி வந்த அக்கட்சி, தமிழ்நாட்டில் முருகனையும், வேலையும் கையில் எடுத்தது. அதன் விளைவாக நடைபெற்ற வேல் யாத்திரை வெளியில் இருந்து பார்ப்பதற்கு தோல்வி என்றாலும், அக்கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியே.

அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக, ‘நம்ம ஊர் பொங்கல்’ எனும் நிகழ்ச்சியை பாஜக நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில் பாஜகவினர் விழாவை கொண்டாடி வருகின்றனர். பல ஊர்களில் பொங்கல் பொங்கவே இல்லையென்றாலும், பஞ்சுகளை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பொங்கலாக நடைபெற்றாலும், பெரும் திட்டமிடலுடன் இத்தகைய விழாக்களை அக்கட்சி நடத்துவதாக கூறப்படுகிறது.

பொங்கல் நாளான நாளைய தினம் சென்னை அருகே மதுரவாயலில் பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊரு பொங்கல் விழா அக்கட்சியின் தேசியத் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார். தமிழர்களுடனும், தமிழ் மரபுகளுடனும் நாங்களும் நெருக்கமானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜே.பி.நட்டாவின் இந்த பயணம் அமைந்துள்ளது.

பொங்கல் விழாவை வைத்து தமிழர்களுடன் பாஜக நெருக்கம் காட்டுவது ஒருபுறமிருக்க, ஜே.பி.நட்டாவின் தேர்தல் நேரத்தில் இந்த பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா, ஜனவரி 14ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமித் ஷா சென்னை வரவுள்ளதாகவும், அப்போது கூட்டணி குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவரது வருகை ரத்து செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக ஜே.பி.நட்டா தமிழகம் வரவுள்ளார்.

அமித் ஷா ஏற்கனவே சென்னை வந்த போது, அதிமுக-பாஜக கூட்டணியை மறைமுகமாக உறுதி செய்தாலும், அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணியில் பாஜக தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணி இன்று வரை நீடித்து வரும் சூழலில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அதேசமயம், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட அக்கட்சியினர், முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம் அறிவிக்கும் என்று கூறி வந்தனர். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல்களை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று சர்ச்சைகளுக்கு முற்றிப் புள்ளி வைத்தார் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி. எனவே, கூட்டணியை இறுதி செய்வது, முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு ஜே.பி.நட்டாவின் பயணம் தீர்வு காணும் என்று தெரிகிறது.

பாஜகவை பொறுத்தவரை வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 40 தொகுதிகளை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். அதிமுகவுக்கு இருக்கும் பலத்தின் அடிப்படையில் எப்படியும் இரட்டை இலக்கங்களில் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பது அக்கட்சியின் கணக்கு. ஆனால், பாஜகவுக்கு அவர்கள் கேட்கும் 40 தொகுதிகளை ஒதுக்கினால், கூட்டணியில் அதிக வாக்கு வங்கியை கையில் வைத்திருக்கும் பாமக அதற்கு மேலான இடங்களை கேட்கும். பாமகவுக்கு நிகராக தேமுதிகவும் கேட்கும். அதுபோக சிறிய கட்சிகளுக்கு 10 என்று வைத்துக் கொண்டால் அதிமுகவால் வெறும் 100 தொகுதிகளில் மட்டுமே நிற்க முடியும்.

ஜெயலலிதா போன்ற இமேஜ் இல்லாத நிலையில், இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். சுமார் 170 இடங்களில் அதிமுக-திமுக என நேருக்குநேர் போட்டி இருந்தால் மட்டுமே தேர்தலில் திமுகவுக்கு டஃப் கொடுக்கவும், பிரதான எதிர்க்கட்சியாக அமரவும் அதிமுகவால் முடியும். இதனை அதிமுக மேலிடமும் நன்கு உணர்ந்தே உள்ளது. எனவே, கூட்டணியில் பாஜகவுக்கு 10க்கும் குறைவான தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என்பதில் அதிமுகவினர் உறுதியாக உள்ளனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையின் போது கிட்டத்தட்ட இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here